
அரசு நில வழக்குகளில் பாதுகாப்பு வழிகாட்டுதல் வெளியிட தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட் உத்தரவு
அரசுக்கு சொந்தமான நிலங்களை சிவில் வழக்குகளில் பாதுகாக்க அதிகாரிகள் காலத்துக்குள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாகக் குறிப்பிட்டு, அதற்கான தெளிவான வழிகாட்டுதல்களை உருவாக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பகுதியில் உள்ள அரசு “நத்தம் புறம்போக்கு” நிலத்தின் உரிமை தொடர்பாக, ராமநாதபுரம் சார்பு நீதிமன்றம் 2001-ல் ஒருதலைபட்ச (எக்ஸ்பார்ட்டி) உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சிவில் சீராய்வு மனுவில் நீதிபதி என்.செந்தில்குமார் இந்த உத்தரவை வழங்கினார். இந்த வழக்கில் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தாலும், கீழமை நீதிமன்றத்தில் எதிர்மனுதாரராக இருந்த கலெக்டர் மீது நடவடிக்கை இல்லை என நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. மேலும் அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்படாததும், அரசு சொத்துக்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை இல்லை என்பதைக் காட்டுகிறது எனக் கருத்து தெரிவித்தது.

































