
அடுத்த 4 மாதங்கள் கடும் விழிப்புடன் இருக்க சுங்கத்துறைக்கு வாரியம் எச்சரிக்கை
விமான நிலையங்களில் தங்கக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அடுத்த நான்கு மாதங்களுக்கு சுங்கத்துறை அதிகாரிகளும் விமான நிலைய பாதுகாப்புப் பிரிவினரும் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும் என மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் (CBIC) எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. சமீப காலத்தில் வெளிநாடுகளிலிருந்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் வழியாக சட்டவிரோதமாக தங்கம் கொண்டு வர முயற்சிகள் அதிகரித்துள்ளதாக அறிவுறுத்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டிகை காலமும் ஆண்டு இறுதியும் நெருங்குவதால், கடத்தல் கும்பல்கள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என உளவுத்துறை எச்சரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, பயணிகளின் உடைமைகள் மற்றும் சாமான்களை கண்காணிப்பதில் அதிநவீன ஸ்கேனிங் கருவிகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும் என வாரியம் அறிவுறுத்தியுள்ளது. சந்தேகத்திற்குரிய நபர்களை கவனித்து, தேவையான இடங்களில் உடனடி நடவடிக்கை எடுத்து கைது செய்யவும் கூறப்பட்டுள்ளது.


































