
காலியாக உள்ள 40 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் நிரப்பப்படாமல் காலியாக இருந்த உயர் சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவப் படிப்புகளுக்கான 40 இடங்களை உடனடியாக தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இடங்களை மாநில அரசு கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சில உயர் சிறப்பு இடங்கள் முன்பு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டிருந்தன. அகில இந்திய அளவிலான கலந்தாய்வு முடிந்த பின்னரும் 40 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததால், அவற்றை மாநில அரசிடம் மீண்டும் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் நடந்த விசாரணையில், தமிழகத்தில் 111 பேர் உயர் சிறப்பு படிப்புக்காக காத்திருப்பதாகவும், காலியிடங்களை நிரப்ப ‘கட் ஆப்’ மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்றும் மாநில அரசு வாதிட்டது. ஆனால் ‘கட் ஆப்’ குறைத்தால் தரம் பாதிக்கப்படும் என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

































