
ஆசிரியர் தினம்: ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி முர்மு
ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோடிக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் அறிவு, திறன், நற்பண்புகள் மற்றும் ஊக்கத்தை விதைக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஆசிரியர்களும் அவர்களை மரியாதை செய்யும் மாணவர்களும் சமூகத்திற்கு முன்மாதிரி எனக் குறிப்பிட்ட அவர், மாணவர்களை தங்கள் சொந்த குழந்தைகளைப் போலக் கருதி அன்புடன் அணுகி, பாரபட்சமின்றி நியாயமாக வழிநடத்த வேண்டும் என்றார். மாணவர்களின் நலனே எப்போதும் முதன்மை எனவும், கோபத்தை வெளிப்படுத்தாமல் பொறுமையுடன் நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். பாடத்திட்டத்தை கற்பிப்பதோடு ஆசிரியரின் பணி முடிவடைவதில்லை என்றும், தங்கள் முன்மாதிரியான செயல்பாடுகள் மூலம் ஆக்கப்பூர்வமான வாழ்க்கைக்கு தேவையான கலை மற்றும் திறன்களையும் மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆசிரியர் வழிகாட்டி மட்டுமல்ல; நலம் விரும்பி, நண்பர், கற்றலுக்கான தேடலுக்கு துணை நிற்பவர் ஆகவும் இருக்க வேண்டும் என்றார்.


































