
தாய் மதம் திரும்பி எஸ்.சி. அந்தஸ்து பெற 3 ஆதாரங்கள் அவசியம்: உச்ச நீதிமன்றம்
ஹிந்து, சீக்கியர் அல்லது பவுத்தம் தவிர பிற மதங்களுக்கு மாறுபவர்கள் பட்டியலின (எஸ்.சி.) அந்தஸ்தை கோர முடியாது என்றும், மதமாற்றம் நிகழும் தருணத்திலேயே முன்பு அனுபவித்த எஸ்.சி. அந்தஸ்து இழக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இதற்கு 1950ஆம் ஆண்டு பட்டியலின வகுப்புகள் தொடர்பான அரசியல் சாசன உத்தரவை நீதிமன்றம் மேற்கோள் காட்டியது. ஆந்திராவைச் சேர்ந்த சின்தடா ஆனந்த் என்பவர் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி போதகரான நிலையில், ராமிரெட்டி என்பவர் தன்னை ஜாதி ரீதியாக துன்புறுத்தியதாகக் கூறி எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை ஆந்திர உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மேல்முறையீடு உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.

































