
பிரதமர், தேர்தல் கமிஷன் குறித்து அவதூறு வீடியோ: எக்ஸ் மீது கேரள போலீஸ் வழக்கு
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய தேர்தல் கமிஷன் குறித்து அவதூறான கருத்துகள் இடம்பெற்றதாக கூறப்படும் ஒரு வீடியோ தொடர்பாக, எக்ஸ் சமூக வலைதளத்தின் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கேரள சைபர் விங் வெளியிட்ட அறிக்கையில், அந்த பதிவு குறித்து தேர்தல் கமிஷன் தங்களின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளது. விசாரணையில், அந்த உள்ளடக்கம் மக்களை தவறாக வழிநடத்தக்கூடியதாகவும், அரசியலமைப்பின் கீழ் செயல்படும் அமைப்புகளை குறைத்து மதிப்பிடும் வகையிலும் இருப்பதாக போலீசார் கூறினர். மேலும், சுதந்திரமாகவும் நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்படுவதை பாதிக்கக்கூடிய அம்சங்கள் அந்த வீடியோவில் இருப்பது உறுதியானதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த பதிவை வெளியிட்டதாக கூறப்படும் லக்ஷிமி என் ராஜூ என்ற நெட்டிசன் உள்ளிட்டவர்கள் மற்றும் எக்ஸ் மீது திருவனந்தபுரம் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

































