
ஜேஎன்யுவில் பாலியல் புகார்: காங்கிரஸ் எம்.பி. பேராசிரியர் பணியில் இருந்து நீக்கம்
டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (ஜேஎன்யு), 11 மாணவியர் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார்களைத் தொடர்ந்து, பேராசிரியரும் காங்கிரஸ் லோக்சபா எம்.பி.யுமான அங்கோம்ச்சா பிமோல் அகோய்ஜாமை பணியில் இருந்து நீக்கியுள்ளது. சமூக அறிவியல் பள்ளியின் கீழ் செயல்படும் சமூக அமைப்புகள் ஆய்வு மையத்தில் அவர் பேராசிரியராக பணியாற்றி வந்தார். மேலும், மணிப்பூரின் இன்னர் மணிப்பூர் லோக்சபா தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.யாகவும் உள்ளார். கடந்த மே மாதம் பல்கலை உள்விவகாரக் குழுவிடம் (ICC) அளிக்கப்பட்ட புகார்களில், வகுப்பின்போது தவறான மற்றும் ஆபாச கருத்துகள் பேசியதாகவும், சில மாணவியரை இரவில் வளாகத்தில் உள்ள தனது வீட்டிற்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. தேர்வில் அதிக மதிப்பெண் தருவதாக ஆசை வார்த்தை கூறியும், மிரட்டியும் சீரழித்ததாகவும் மாணவியர் தெரிவித்தனர்.


































