
‘ஹனி டிராப்’ வழியில் ராணுவ தகவல் கசிவு: விமானப்படை விங் கமாண்டர் கைது
சமூக வலைதளத்தில் விரிக்கப்பட்ட ‘ஹனி டிராப்’ காதல் வலையில் சிக்கி, ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக கூறி 44 வயது இந்திய விமானப்படை விங் கமாண்டரை டில்லி போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் உளவுத்துறை வலையமைப்பு தொடர்பு இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை விவரப்படி, கடந்த ஏப்ரலில் சமூக வலைதளம் வழியாக ஒரு பெண் அந்த அதிகாரியை தொடர்பு கொண்டுள்ளார். முதலில் நண்பராக பழகி, பின்னர் நெருக்கத்தை வளர்த்துக் கொண்டு, இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த பெண் கேட்டதன் பேரில் விமானப்படை நடவடிக்கைகள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை அவர் அனுப்பியதாக போலீசார் தெரிவிக்கின்றனர். மேலும் முக்கிய ராணுவ தகவல்கள் மற்றும் ஆவணங்களும் பகிரப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. அதிகாரியின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து விமானப்படை உயரதிகாரிகள் உள்நிலை விசாரணை நடத்தி, பின்னர் டில்லி போலீசில் புகார் அளித்துள்ளனர்.


































