
ஆக.11-ஐ சுதந்திர தினமாக அறிவித்த பலூசிஸ்தான்; உலக அங்கீகாரம் கோரிக்கை
பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலூசிஸ்தான், பாகிஸ்தானில் இருந்து பிரிவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆக.11-ஐ தன் சுதந்திர தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனுடன், பலூசிஸ்தானை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என உலக நாடுகளிடம் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. பரப்பளவில் பெரியதும், இயற்கை வளங்கள் நிறைந்ததும், புவியியல் ரீதியாக முக்கியத்துவம் கொண்டதுமான மாகாணமாக பலூசிஸ்தான் குறிப்பிடப்படுகிறது. பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் கோரி நீண்ட காலமாக போராட்டம் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பில் கூறப்பட்டதன்படி, 1947 ஆகஸ்ட் 11 அன்று பலூசிஸ்தான் தனி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் 1948 மார்ச் 27 அன்று பாகிஸ்தான் ராணுவம் பலவந்தமாக ஆக்கிரமித்து தன் நாட்டுடன் இணைத்துக் கொண்டதாகவும், அதன்பிறகு பலூச் மக்கள் தொடர்ந்து எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


































