
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை வதந்தி: பாரத் பெட்ரோலியம் மறுப்பு
புதுடில்லி: நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல், டீசல் பற்றாக்குறை நிலவுகிறது என பரவும் தகவல்கள் முற்றிலும் ஆதாரமற்ற வதந்திகள் என்று பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) தெரிவித்துள்ளது. வெளியிட்ட அறிக்கையில், இந்தியா முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை எதுவும் இல்லை என்றும், இந்தியா பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றுமதி செய்யும் நாடாக இருப்பதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது. மேலும், கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியவற்றின் போதுமான கையிருப்பு இருப்பதாகவும், விநியோகம் எந்தத் தடையுமின்றி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தது. BPCL முழுமையாகச் செயல்பட்டு வருவதாகவும், தடையற்ற எரிபொருள் விநியோகத்தை உறுதியாக மேற்கொள்ளும் என்றும் கூறியது. பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்; அத்தியாவசியமின்றி எரிபொருளைச் சேமிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டது.

































