
தமிழக கோயில்களில் தரிசன முன்பதிவு: பயன்களும் அச்சங்களும்
திருப்பதி, சபரிமலை போன்ற இடங்களில் உள்ள நடைமுறையைப் போல, தமிழக கோயில்களிலும் தரிசனத்திற்கு முன்பதிவு முறையை கொண்டு வர தமிழக அரசு விருப்பம் காட்டுகிறது. இதுகுறித்து கோவை மக்களிடம் கேட்டபோது, இந்த மாற்றம் தேவையா என்ற விவகாரத்தில் கருத்துகள் இருவேறு திசைகளில் சென்றன. சிலர், மனக்கஷ்டம் வந்தால் திடீரென கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வதே பலரின் வழக்கம் என்பதால், “முன்பதிவு செய்தால்தான் தரிசனம்” என்ற கட்டாயம் சிரமம் தரும் எனக் கூறினர். நீண்ட நேரம் காத்திருப்பதை குறைக்கும் வசதிகளை மேம்படுத்தி, பணம் கொடுத்தால் தனி தரிசனம் என்ற நிலையை மாற்றி ஒரே வரிசை முறையை கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.


































