
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜி முன்ஜாமின் மனு தள்ளுபடி
டாஸ்மாக் ஊழல் வழக்கில், தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்தது. மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர் தொடர்பான முறைகேடுகள், சட்டவிரோதமாக பார்கள் நடத்துதல், டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானம் விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோடி ரூபாய் அளவிலான ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நீதிபதி ஜி.கே. இளந்திரையன் அமர்வில் நடந்த விசாரணையில், செந்தில் பாலாஜி தரப்பில், முதல் தகவல் அறிக்கையில் அவருக்கு எதிராக குறிப்பிட்ட புகார் இல்லை என்றும், பொதுவான குற்றச்சாட்டுகள் மட்டுமே கூறப்பட்டுள்ளன என்றும் வாதிடப்பட்டது. டாஸ்மாக் அதிகாரிகள் செய்ததாக கூறப்படும் குற்றச்செயல்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.


































